திவ்ய தேசம் 3 - திருவெள்ளறை (ஸ்வேதகிரி)
இந்த வைணவ திருத்தலம் திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில், துறையூருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள் ஆனார் என்று நம்பப்படுகிறது.
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்து, மூலவர் புண்டரீகாக்ஷப் பெருமாள் (செந்தாமரைக் கண்ணன்) அருள் பாலிக்கிறார். தாயார் செண்பகவல்லி (செங்கமலவல்லி) என்கின்ற பங்கயச் செல்வி. தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உத்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம். விமானம், விமலாக்ருதி விமானமாகவும், வில்வமரம் தல விருட்சமாகவும் அறியப்படுகின்றன.
திவ்ய கந்த, குச, சக்கர, புஷ்கல, பத்ம, வராக, மணிகர்ணிகா என்று மொத்தத்தில் ஏழு தீர்த்தங்கள் கோயில் வளாகத்துள்ளேயே அமைந்துள்ளன. இவ்வைணவ திருப்பதியை, பெரியாழ்வார் (பெரியாழ்வார் திருமொழியில் 11 பாசுரங்கள்) மற்றும் திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழியில், சிறிய திருமடலில் மற்றும் பெரிய திருமடலில் சேர்த்து 13 பாசுரங்கள்) மங்களாசாசனம் செய்துள்ளனர்.
அவற்றில் சில, உங்கள் பார்வைக்கு:
பெரியாழ்வார் அருளியவை:
**********************
ஆறாம் திருமொழி - உய்யவுலகு
(தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)
71@..
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி*
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்*
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய்.* மதிள்சூழ்-
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.*
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை*
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே.
எட்டாம் திருமொழி - இந்திரனோடு
(கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)
192@..
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மாமலர் கொண்டு* மறைந்துஉவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதிரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இதுவாகும்* அழகனே. காப்பிடவாராய். (2) 1.
197@
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்* கருநிறச் செம்மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணிமாட* மதிள்திரு வெள்ளறை நின்றாய்.
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே. காப்பிடவாராய். 6.
198@
கள்ளச் சகடும் மருதும்* கலக்கழிய உதை செய்த*
பிள்ளையரசே.* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளிஉடை வெள்ளறை நின்றாய்.*
பள்ளி கொள் போது இதுவாகும்* பரமனே. காப்பிடவாராய். 7.
*********************************************
திருமங்கையாழ்வார் 'பெரிய திருமொழி'யில் அருளியவை:
************************
ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி
இந்த பத்து பாசுரங்களில், தன்னை அடிமையாக ஏற்று, பெருமானின் திருவடியில் தொண்டு செய்ய, தடங்கல்களை நீக்கி அருளுமாறு திருவெள்ளறை புண்டரிகாஷனை வேண்டுகிறார் !
1368@..
வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை* மூவெழுகால்கொன்றதேவ*
நின்குரைகழல் தொழுவதோர்வகை* எனக்கருள்புரியே*
மன்றில்மாம்பொழில் நுழைதந்து* மல்லிகைமௌவலின் போதலர்த்தி*
தென்றல்மாமணம் கமழ்தரவரு* திருவெள்ளறை நின்றானே (5.3.1)
பரசுராமனாக, கையில் மழு ஏந்தி, பூவுகில் இருபத்தோரு தலைமுறை அரசர்களை அழித்தவனே ! மல்லிகைப் பந்தல் வழி வரும் தென்றலானது, வானுயர்ந்த சோலைகளில் நுழைந்து, தான் ஏந்தி வந்த நறுமணத்தை எங்கும் கமழச்செய்யும் திருவெள்ளறையில் கோயில் கொண்டவனே ! ஒளி மிக்க தாமரையத்த உன் திருவடிகளை என்றும் பற்றிட வழிமுறை ஒன்று எனக்கருள்வாயாக !
********************************
1371@
வாம்பரியுக மன்னர்தம் உயிர்செக* ஐவர்க்கட்கு அரசளித்த*
காம்பினார் திருவேங்கடப் பொருப்ப.* நின் காதலை அருள் எனக்கு*
மாம்பொழில் தளிர்கோதிய மடக்குயில்* வாயது துவர்ப்பெய்த*
தீம்பலங்கனித் தேனது நுகர்* திருவெள்ளறை நின்றானே (5.3.4)
யுத்த பூமியில் எதிர்த்து நின்ற அரசர்களை அழித்து, பஞ்ச பாண்டவர்க்கு அவர்க்குரிமையான அரசை மீட்டுத் தந்த கண்ணபிரானே ! திருவேங்கடம் வாழ்பவனே ! மாவிலைகளை உண்டதால் நாவில் ஏற்பட்ட கசப்பை, பக்கமிருக்கும் பலாவின் தேனைக் குடித்து போக்கிக் கொள்ளும் குயில்கள் பாடும் திருவெள்ளறை நின்ற பெருமாளே, உன் மேல் எனக்கிருக்கும் பேரன்பு எப்போது நீங்கா வண்ணம் எனக்கருள்வாயே !
*****************************************
1372@
மானவேல் ஒண்கண்மடவரல்* மண்மகள்அழுங்க முந்நீர்ப்பரப்பில்*
ஏனமாகி அன்றுஇருநிலம் இடந்தவனே.* எனக்கருள் புரியே*
கானமாமுல்லை கழைக் கரும்பேறி* வெண்முறுவல் செய்துஅலர்கின்ற*
தேனின் வாய்மலர் முருகுகுக்கும்* திருவெள்ளறை நின்றானே (5.3.5)
முன்பொரு முறை, அலை பாயும் பெரிய அழகிய கண்களை உடைய பூதேவி, கடலடியில் பெருந்துயரில் உழன்றபோது, நீ வராக அவதாரமெடுத்து, கொம்பின் மேல் ஏற்றி, அவளை மீட்டெடுத்தாய். கரும்பின் மேல் படர்ந்து, வெண் சிரிப்பை உதிர்ப்பது போல் தோற்றமளிக்கும் பெரிய முல்லைக் கொடியில் தேனுண்ணும் வண்டுகள் நிறைந்த திருவெள்ளறை நகர் வாழ் பெருமாளே ! எனக்கு அருள் புரிவாய் !
*********************************
1376@
ஆங்குமாவலிவேள்வியில் இரந்துசென்று* அகலிடம் முழுதினையும்*
பாங்கினால்கொண்டபரம. நின்பணிந்தெழுவேன்* எனக்கு அருள்புரியே,*
ஓங்குபிண்டியின் செம்மலரேறி* வண்டுஉழிதர*
மாவேறித்தீங்குயில் மிழற்றும்படப்பைத்* திருவெள்ளறை நின்றானே (5.3.9)
முன்பொரு முறை, வாமன அவதாரமெடுத்து, மாபலிச் சக்ரவர்த்தி நடத்திய யாகத்தின் போது, அண்டம் முழுவதையும் அவனிடம் பாங்காக இரந்து பெற்ற பரமனே ! அசோக மரங்களின் சிவந்த மலர்களில் மகிழ்ச்சியாக விளையாடும் வண்டுகளைப் பார்த்து இனிமையாகப் பாடும் குயில்கள் நிறைந்த திருவெள்ளறை நகரில் கோயில் கொண்ட பெருமானே ! உன்னை என்றும் தொழுது உனக்கு தொண்டு செய்ய எனக்கு அருள் புரிவாயாக !
***********************************
1377@..
மஞ்சுலா மணிமாடங்கள்சூழ்* திருவெள்ளறை அதன்மேய*
அஞ்சனம்புரையும் திருவுருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சுலாவிய வேல்வலவன்* கலிகன்றிசொல் ஐயிரண்டும்*
எஞ்சலின்றிநின்று ஏத்தவல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே (5.3.10)
அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவெள்ளறையில் என்றும் ஆட்சி புரியும் அழகிய திருமேனி கொண்டானை (அஞ்சன வண்ணன்), ஆதி நாயகனை (ஜகத் காரணன்), அமுதை ஒத்தவனைப் பற்றி, விடம் தோய்த்த வேல் கொண்டு பகைவர்களை விரட்டும் கலியனாகிய நான் இயற்றிய இப்பத்து பாடல்களையும் தவறாமல் படிக்கும் அடியார், தேவர்களுக்கு அரசன் ஆவர்!
****************************************************
பத்தாம் பத்து - முதல் திருமொழி
1851@
துளக்கமில் சுடரை,* அவுணனுடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*
அளப்பில் ஆரமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினை* சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4
என்றும் ஒளி குறையா பெருஞ்சுடர் போன்றவனை, ஹிரண்யனின் உடல் பிளந்த வலிமை மிக்கவனை, நாம் திருப்பேர் நகர் சென்று அடி பணிவோம். உண்ண உண்ண தெவிட்டாத அமுதம் போன்றவனை, நித்யசூரிகளுக்கு அருள் விளக்காய் இருப்பவனை, இன்றே திருவெள்ளறை நகர் சென்று, அவன் மலரடி பற்றி நாம் வணங்குவோமாக !
**************************
விசாலமான வளாகமும், பிரும்மாண்டமான மதில் சுவர்களும் இக்கோயிலின் சிறப்பு அம்சங்கள். முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளன. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.
ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில் பெருமாள் பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்து இங்கு காட்சியளிப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் (ராமானுஜர்) இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன. நாதமுனிகளின் பிரதம சீடரான உய்யக்கொண்டான் மற்றும் எங்களாழ்வான் ஆகியோரின் அவதாரத்தலம் இது. உடையவர் ஸ்ரீராமானுஜர் இங்கு சிறிது காலம் வாழ்ந்து வைணவத்தை வளர்த்திருக்கிறார். மணவாளமாமுனிகளும், வேதாந்த தேசிகரும் (தனது ஹம்ச சந்தேஸத்தில்) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இத்தலத்தைப் பற்றி பாடியிருக்கின்றனர்.
கருடாழ்வாரும், மார்க்கேண்டயரும், சிபிச் சக்ரவர்த்தியும் வழிபட்ட புண்ணியத் தலமிது. சிபிச்சக்கரவர்த்திக்கு ஸ்வேத வராஹனாக (வெள்ளைப் பன்றி) தலப்பெருமாள் காட்சி தந்து அருள் பாலித்ததால், மூலவருக்கு ஸ்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதபுரி ஷேத்திரம் என்றும் பெயர் வந்தது. வடக்கு வாயிலில் உள்ள ராஜகோபுரத்தில், ஹொய்ஸாலா மன்னர்கள் இக்கோயிலுக்கு செய்த திருப்பணிகள் குறித்த வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன.
இங்குள்ள பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளன. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. கோயிலுக்கு, உத்தராயண வாயில் என்றும் தக்ஷ¢ணாயன வாயில் என்றும் (கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில் உள்ளது போலவே) இரண்டு வாயில்கள் உள்ளன. தை முதல் ஆணி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷ¢ணாயன வாசல்வழியாகவும், பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.
இவ்வாசல்களை குறித்து ஒரு சிறு விளக்கம்: மனித வாழ்க்கையில் ஜனனம், மரணம் என்று இரு தனி வாசல்கள் உள்ளதாகக் கருதலாம். அவற்றில் நுழையும்போது, பரமாத்மாவை உணரும் பாக்கியம் ஆன்மாவுக்குக் கிடைக்கிறது. அதனாலேயே, பரந்தாமன், உத்தராயணத்தின் தொடக்கத்தில் சூரிய நாராயணனாகவும், தட்சிணாயனத்தின் முடிவில் கோவிந்தனாகவும் அருள் பாலிப்பதாக ஓர் ஐதீகம் உண்டு. உத்தராயண வாசலை, ஜீவாத்மாக்கள் இப்பூவுலகிற்குள் (குபேரனின் இடம்) நுழையும் வாசலாகவும், தட்சிணாயன வாசலை, மரண லோகத்தின் (யமனின் இடம்) நுழைவாயிலாகவும் எண்ணிக் கொள்ளலாம்.
இக்கோயிலுக்கு 'நாழி கேட்டான்' வாயில் என்று இன்னொரு வாசலும் உண்டு ! ஒரு முறை, தனது தற்காலிக உறைவிடமொன்றுக்குச் சென்று திரும்பிய பெருமாளை மகாலஷ்மி இவ்வாசலில் வழி மறித்து, அவர் தாமதம் குறித்து கேள்வி கேட்டதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. சித்திரை கோடை திருநாள் சித்ராபவுர்ணமியில் கஜேந்திர மோட்சமும், ஆவணி ஸ்ரீஜெயந்தி வீதியடி புறப்பாடும் நடைபெறுகின்றன. பங்குனி திருவோணம் நிட்சத்திரத்தில் பிரமோத்சவம் கொண்டாடப்படுகிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா


